காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி, மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
டாடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் சார்பில், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 198 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இந்த காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கரூர் மின் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு உரிமம் வழங்கி மத்திய மின்சார ஆணையம் உத்தரவிட்ட நிலையில், எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் டாடா நிறுவனத்துக்கு மின் கம்பிகள் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தார்.
மேலும், புதிய உரிமம் பெறும் வரை, மின் கம்பிகள் பொருத்துவதற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 39 தூண்களை பாதுகாக்கவும் அவர் அறிவுறுத்தினார்.