ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்தை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மது போதையில் எடுத்துச் சென்று அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் நிறுத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து ஒன்றை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருவர், மது போதையில் கல்லூரியில் இருந்து அறந்தாங்கி வரை ஓட்டிச் சென்றுள்ளனர்.
அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் டீசல் இல்லாத காரணத்தால் பேருந்து நின்று விட்டது. இதை அறிந்த அந்த மாணவர்கள் உடனடியாக பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு இறங்கிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்த போலீசார், கல்லூரி பேருந்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.