போலி ஆவணம் மூலம் திமுக முன்னாள் கவுன்சிலர் அபகரித்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தரக்கோரிப் பாதிக்கப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை சமுத்திரம் காலனியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது உறவினர்களுக்கு, பரம்பரைச் சொத்தாக ஒரு ஏக்கருக்கும் மேலான நிலம் உள்ளது.
50 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சாதிக் பாஷா போலிப் பத்திரம் மூலம் தனது பெயருக்குக் கடந்த 23ஆம் தேதி பட்டா மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த பாதிக்கப்பட்டவர், நிலத்தை மீட்டுத் தரக்கோரிக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர், மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.