சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற stand-up comedy நடிகர் குணால் கம்ரா, இந்த முறை, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை பற்றிப் பேசி, பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சிவசேனாவின் கோபத்தைத் தூண்டும் அளவுக்கு அப்படி என்ன சொன்னார் குணால் கம்ரா ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த, சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே அமோக வெற்றிபெற்றது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல stand-up comedy நடிகரான குணால் கம்ரா, ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று கூறிய சம்பவம், சிவசேனா தொண்டர்களைக் கொதித்தெழ வைத்துள்ளது.
மும்பையில் ஒரு தனியார் ஹோட்டலில், அவரது காமெடி நிகழ்ச்சி நடைபெற்றது. நயா பாரத் என்று பெயரிடப் பட்ட அந்த காமெடி நிகழ்ச்சியில் தற்போதைய அரசியல் நிகழ்வுகளை நையாண்டி செய்து குணால் கம்ரா பேசினார்.
மகாராஷ்டிராவின் அரசியலில், என்சிபி மற்றும் சிவசேனா கட்சிகள் உடைக்கப்பட்டதைப் பற்றி விமர்சனம் செய்தார். குறிப்பாக, சிவசேனா கட்சியை உடைத்து, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததை விமர்சனம் செய்த குணால் கம்ரா ,துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை ஒரு துரோகி என்று கூறினார். மேலும், உத்தவ் தாக்கரேவின் தந்தையை ஏக்நாத் ஷிண்டே திருடியதாகவும் குற்றம் சாட்டினார்.
பெயரைக் குறிப்பிடாமல், ஏக்நாத் ஷிண்டேவை அவரது உடலமைப்பை மட்டும் குறிப்பிட்டுக் கிண்டல் செய்திருந்தார் குணால் கம்ரா. மேலும், தானேவில் இருந்து ஒரு தலைவர் என்ற பாடலைப் பாடி, விமர்சனம் செய்த குணால்,தனது எக்ஸ் பக்கத்திலும் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, கூகுள் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது. திங்கட்கிழமையும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்தது.
அதனால், கோபமடைந்த சிவசேனா கட்சி தொண்டர்கள், குணாலின் காமெடி நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட மும்பையில் உள்ள (The Habitat) தி ஹாபிடேட் என்ற ஹோட்டல் ஸ்டுடியோவை சூறையாடினர். நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கினர்.
குணால் கம்ரா மீது மும்பை காவல்துறையினர் பொதுமக்களுக்குத் தவறான தகவல் அளித்தல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஹோட்டலை சூறையாடிய யுவசேனா பொதுச்செயலாளர் ரஹூல் கனல் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 20-க்கும் மேற்பட்ட சிவ சேனா தொண்டர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கம்ராவின் வீடியோவை உருவாக்குவதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதன் உள்ளடக்கத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்திய The Habitat நிறுவனம், இந்த வீடியோவால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கம்ரா தனது கீழ்த்தரமான நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நையாண்டி செய்வதாக,யாரையும் அவமதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், பாலாசாகேப் தாக்கரேவின் மரபை முன்னோக்கி எடுத்துச் செல்வது ஷிண்டேதான் என்றும் குறிப்பிட்டுள்ளார். துணைமுதல்வர் அஜித் பவாரும், யாரும் சட்டம் அரசியலமைப்பு விதிகளுக்கு அப்பால் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார்.
மகாயுதி கூட்டணியில் இருந்து, குணால் கம்ராவுக்கு எதிர்ப்பு வந்துள்ள நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவாக நிற்கின்றன. குணால் கம்ராவின் ஒவ்வொரு வாக்கியமும் சரியானது என்று உத்தவ் தாக்கரே சிவசேனா கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் நானா படோல் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நாக்பூர் வன்முறை ஓய்ந்த அமைதி திரும்பியது என்று திரும்புவதற்குள்,குணால் கம்ரா, தனது stand-up comedy மூலம், நெருப்பைப் பற்றவைத்துள்ளார். இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல. ஏற்கெனவே அரசியல் நையாண்டி என்ற பெயரில், குணால் கம்ரா அரசியல் stand-up comedy-க்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.