சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சார வாகனத்தை 40 ஆயிரம் ரூபாய்க்குத் தருவதாகக் கூறி, 250-க்கும் மேற்பட்டவர்களிடம் பணத்தைச் சுருட்டிய சம்பவம் காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்துள்ளது.
சின்னக் காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள KSM நகரில், “ஸ்ரீ பாலாஜி எண்டர்பிரைசஸ்” என்ற E பைக் ஷோரூம் செயல்பட்டது. இந்த ஷோரூமிற்கு வாகனம் பெற வந்தவர்களிடம் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின்சார இருசக்கர வாகனத்தை 40 ஆயிரம் ரூபாய்க்குத் தருவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.
இதேபோல் ஒரு சிலருக்கு மின்சார இருசக்கர வாகனத்தையும் “ஸ்ரீ பாலாஜி எண்டர்பிரைசஸ்” வழங்கியுள்ளது. இதனை நம்பி நூற்றுக்கணக்கானோர் அடுத்தடுத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தி இருசக்கர வாகனத்தை முன்பதிவு செய்தனர்.
திடீரென அந்த ஷோரூம் திறக்கப்படாததால், பணம் கட்டியவர்கள், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட ஷோரூம் இயங்கி வந்த கட்டடத்தை வாடகைக்கு விட்ட கட்டட உரிமையாளரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.