கோலாலம்பூரின் மையப்பகுதியில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான இந்து கோயில், இடிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. மசூதி கட்டுவதற்காக இந்து கோயிலை இடம் மாற்றுவது பொதுமக்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் எந்த இந்து கோயில் இடிக்கப்படுகிறது ? ஏன் இடிக்கப்படுகிறது ? அதன் பின்னணி என்ன ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள மலேசியாவில் நான்காவது பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 6.3 சதவீதம் பேர் இந்துக்கள் ஆவார்கள்.மலேசியாவின் மேற்குப் பகுதிகளில் தான் பெரும்பாலான இந்துக்கள் வாழ்கின்றனர்.
இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் மலாய் மக்களும், சீனர்களும், இந்தியர்களும் வாழும் மலேசியாவில் பெரும்பாலானோர் இஸ்லாம் மதத்தையே பின்பற்றுகிறார்கள். ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில், ஸ்ரீ கந்தசுவாமி கோவில், சுந்தரராஜப் பெருமாள் கோயில், பத்துமலை முருகன் என 50க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் மலேசியாவில் உள்ளன.
அந்த வகையில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே,1894 ஆம் ஆண்டு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில், மலேசியாவில் கட்டப்பட்டது. பரபரப்பான ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் இக்கோயில், பிரபலமான ஜேக்கல் மால் தெருவின் குறுக்கே அமைந்துள்ளது.
தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோயில் இருக்கும் நிலம் இரண்டு பகுதியாக உள்ளது. ஒன்று தனியாருக்குச் சொந்தமானது மற்றும் மற்றொன்று அரசுக்குச் சொந்தமானது ஆகும்.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் அரசு நிலத்தில் தான் உள்ளது. 2014ம் ஆண்டு, கோயில் அருகே உள்ள தனியார் நிலம், பிரபல ஜவுளி தொழில் நிறுவனமான ஜேகல் டிரேடிங் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. நிறுவனத்தின் மறைந்த நிறுவனர் முகமது ஜாகல் அகமது, இந்து கோயில் உள்ள இடத்தில், பெரிய மசூதியைக் கட்டி இஸ்லாமியர்களுக்கு பரிசளிப்பதற்காக இந்த கோயில் நிலத்தை வாங்கினார் என்று கூறப்படுகிறது.
தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் நிலம் 4000 சதுர அடிதான். ஆனால் ஜேகல் டிரேடிங் நிறுவனம் மொத்தமாக 11 ஆயிரம் சதுர அடியை வாங்கியுள்ளது. மேலும், இப்போது 7000 சதுர அடியில் மசூதிக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.
இந்துக் கோயில் இருந்த இடத்தில், பெரிய மசூதியைக் கட்டுவதற்கு 2021 ஆம் ஆண்டு, மலேசிய அரசும், கோலாலம்பூர் நகர சபையும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கோயிலை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப் பட்டது.
தேவி ஸ்ரீ பத்ர காளி அம்மன் கோயிலை இடமாற்றம் செய்வதற்கான மொத்த செலவுகளையும் ஜேகல் டிரேடிங் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவும் முன்வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பத்ர காளி அம்மன் கோயில் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தூரம், நிலத்தின் அளவு மற்றும் வெள்ள அபாயம் ஆகியவற்றின் காரணமாக, முன்மொழியப்பட்ட கோவிலுக்கான மாற்று இடங்களை கோயில் நிர்வாக குழு நிராகரித்துள்ளது.
இதற்கிடையே, இடமாற்ற பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும் வரை, கோயிலின் கட்டமைப்பை இடிக்க வேண்டாம் என்று கோலாலம்பூர் நகர சபை முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக,கோயில் இடிப்பு வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்கால இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மஸ்ஜித் மதானி என்று அழைக்கப்படும், புதிய மசூதியின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவுக்குப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தலைமை தாங்குவார் என்று செய்திகள் வெளியானதில், இருந்தே பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
பிரதமரின் “மலேசியா மதானி” என்ற முழக்கத்தின் அடிப்படையிலேயே இந்த புதிய மசூதிக்கு மஸ்ஜித் மதானி என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரதமராக எந்த கோவிலையும் இடிப்பதைத் தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று கூறியுள்ள பிரதமர் அன்வர், இந்துக் கோயில் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னரே மசூதி கட்டப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.
ஒரு மசூதி கட்டுவதற்காக இந்து கோயிலை மாற்றுவது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியர்களின் உரிமைகளுக்கான ஐக்கிய உரிமை கட்சியின் தலைவர் ராமசாமி பழனிசாமி, இந்தக் கோயில் ஒரு ‘குறிப்பிடத்தக்க மைல்கல்’ என்றும், ‘மலேசியாவின் சுதந்திரத்திற்கு முந்தையது’ என்றும் வலியுறுத்தியுள்ளார். வேறு எந்த நோக்கத்துக்காவும், நீண்டகாலமாக இருந்து வரும் இந்து கோவிலை இடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
என்றாலும், இந்தப் பிரச்சினையில் வேறு கோணத்திலும் விவாதம் செய்யப்படுகிறது. அதாவது, மலேசியாவின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தியர்கள் ரப்பர் தொழில் மற்றும் ரயில்வேக்கு தொழிலாளர்களாக மலேசியாவுக்குக் கொண்டு வரப் பட்டதாகவும்,அதனால் அவர்களுக்கு நில உரிமை கிடையாது என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், 700,000 க்கும் மேற்பட்ட மலேசிய இந்தியர்கள் வாழும் சிலாங்கூர் மாநிலத்தில், 773 கோயில்கள் உள்ளன, அனைத்தும் அனுமதியின்றி கட்டப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உண்மையில் அந்தப் பகுதியில் 4 மசூதிகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு இந்து கோயில்தான் உள்ளது. அதுவும் நூற்றாண்டு கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலாக உள்ளது. எனவே இந்துக்களின் உணர்வை மலேசிய அரசு புரிந்துகொள்ள வேண்டும் என இந்து மக்கள் கூறுகின்றனர்.
மேலும், ஆலயம் இடிக்கப் படாது என்றும்,ஆகவே மாற்று இடம் அவசியம் இல்லை என்றும் கோலாலம்பூர் நகர மேயர் உறுதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் பார்த்திபன். பொய்ச் செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோயிலை இடிப்பதற்கும், இடமாற்றம் செய்வதற்கும் இந்துக்களின் கடுமையான எதிர்ப்பு அதிகரித்து வருவதால், நட்புரீதியான தீர்வு எட்டப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.