பாரதி பிறந்த இல்லத்தை பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், மகாகவி பாரதியார் பிறந்த வீடு, முறையான பராமரிப்பு இல்லாமல் இடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 அன்று, என் மண் என் மக்கள் பயணத்தின்போது, மகாகவி பிறந்த இல்லத்தைத் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என கூறியுள்ளார்.
மகாகவியின் புரட்சி வேள்வியின் கனலை அந்த இல்லத்தில் இன்னும் உணர முடிகிறது என்றும், அத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தைப் பராமரிக்காமல், இன்று இடிந்து விழும் அளவுக்குக் கொண்டு சென்றிருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்
தமிழகத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்களுக்கெல்லாம் சிலை வைக்க பல நூறு கோடிகள் வீணாகச் செலவிடும்போது, தமிழ் மொழியின் அடையாளங்களில் ஒருவராகிய மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தைப் பராமரிக்க திமுக அரசுக்கு மனமில்லையா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.