எட்டயபுரம் அருகே பேச வரமறுத்த 17 வயது சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் முன்னாள் காதலன் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும் சிறு வயது முதலே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு காதலாக மாறிய நிலையில், இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருவரும் நண்பர்களாக இருப்போம் எனக்கூறிப் பிரிந்துவிட்ட நிலையில், சந்தோஷ் தொடர்ந்து சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சந்தோஷால் மகளுக்கு பிரச்னை வரும் என்று எண்ணிய தாய் காளியம்மாள், தனது மகளை எட்டயபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாட்டி வீட்டில் இருந்த சிறுமி கடந்த 23ஆம் தேதி பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பேச வரமறுத்ததால் முன்னாள் காதலன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.