கோயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழப்பது தொடர்பாக, சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம் ஆகிய கோயில்களில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதைச் சுட்டிக் காட்டிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதிலளித்துப் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கோயில்களில் ஏற்பட்ட உயிரிழப்பு விபத்து அல்ல என்றும், உடல்நலக் குறைவால் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருக்கோயில்களில் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.