உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக காலை முதல் காத்திருந்த பெண்மணி மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்காததால் புலம்பிக் கொண்டே சென்றார்.
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர். காலை முதலே சாப்பிடாமல் காத்திருந்த நிலையில் இரவு 7 மணிக்கு பிறகே மாவட்ட ஆட்சியர் சங்கீதா வருகை தந்தார்.
அப்போது மகளிர் உரிமை தொகை கேட்டு மனு கொடுக்க வெகு நேரம் காத்திருந்த பெண்மணி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதனை வாங்கிய மாவட்ட ஆட்சியர் “பரிசீலனை செய்கிறேன்” என கூறிவிட்டு அடுத்த மனுவை வாங்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்மணி “இதை நீங்க சொல்வதற்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தோம்” என புலம்பியபடியே வட்டாட்சியர் அலுவலத்திலிருந்து வெளியேறினார்.
இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை அழைத்து அந்த பெண்மணியை மீண்டும் கூப்பிடுங்கள் என்று கூறினார். ஆனால் அந்தப் பெண்மணியோ கூப்பிட கூப்பிட நிற்காமல் வேதனையோடு புலம்பியபடியே சென்றார்.