சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி துப்பாக்கியை காட்டி 7 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
காரைக்குடி பொன் நகரை சேர்ந்த பாலாஜி என்பவர் மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை, தான் வைத்திருந்த போலி துப்பாக்கியை காட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்ததன் அடிப்படையில், போக்சோ வழக்கில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவில், பாலாஜிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.