புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்திலிருந்த அரசு தொடக்கப் பள்ளி கடந்த 2017-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால் இதுவரை உயர்நிலைப்பள்ளிக்குத் தேவையான எந்த ஒரு புதிய கட்டிடங்களும் அரசு சார்பில் கட்டித்தரப்படாத நிலையில் பொன்னகரம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி சுமார் 12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் உள்ள கட்டிடத்தையும் தகரக் கூரையும் அமைத்துக் கொடுத்தனர்.
ஆனாலும் போதிய வகுப்பறை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றவில்லை எனப் பெற்றோரும் மாணவர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.