ஆம்பூர் அருகே அரசுப் பள்ளி விழாவில், சரித்திர பதிவேடு குற்றவாளி மேடையேறிய விவகாரத்தில் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 22ஆம் தேதி ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவியின் கணவரும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவருமான கணேசன் என்பவர் மேடையேறி சினிமா பாலை பாடி, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாவை நிகழ்ச்சிக்கு அழைத்த நிலையில், அவரது கணவர் அழையா விருந்தாளியாக வந்து கலந்து கொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரனைக் காட்டுக்கொல்லை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.