இயந்திரம் மூலம் வழங்கப்படும் காபியால் இதய நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஒரு புதிய அறிவியல் ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த ஆய்வின் முழு விவரம் என்ன ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக,வேலை நேரங்களில் மனச்சோர்வினால் ஏற்படும் மன அழுத்தம் நீங்குவதற்காக, பெரும்பாலான அலுவலகங்களில் இயந்திரம் மூலம் காபி வழங்கப் படுவது வழக்கமாக உள்ளது.
வெளி இடங்களில் அருந்தும் காபியை விட பணியிடங்களில் வழங்கப்படும் காபி, உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சால்மர்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து, உப்சாலா பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 14 வெவ்வேறு பன்னாட்டு நிறுவன அலுவலகங்களில் உள்ள காபி இயந்திரங்களில் இருந்து காபி மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பிரபலமான காபி பிராண்டுகளின் அரைத்த காபி கொட்டைகளை மீடியம் மற்றும் டார்க் என்ற நிலையில் குறிப்பிட்ட காபி இயந்திரங்களில் ஆய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு இயந்திரத்திலிருந்தும், இரண்டு இரண்டு காபி மாதிரிகள் எடுக்கப்பட்டு, மூன்று வாரங்கள் வரை சோதனை செய்யப்பட்டன.
இந்த ஆய்வின் மூலம், இயந்திரத்தால் தயாரிக்கப்படும் காபியில் லிட்டருக்கு 176 மில்லிகிராம் காஃபெஸ்டால் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற பில்டர் காபியில் இருப்பதைவிட இது கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாகும்.
அனைத்து காபி இயந்திரங்களிலும் இந்த பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்த ஆய்வாளர் டேவிட் இக்மேன், பயன்படுத்தப்படும் காபி இயந்திரங்களைப் பொறுத்துக் கொழுப்பை ஏற்படுத்தும் பொருட்களின் அளவு மாறுபடுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
பெரும்பாலான காபி இயந்திரங்கள் கொழுப்பு சேர்மங்களை திறம்பட வடிகட்டுவதில்லை என்றும், பொதுவாக அலுவலகங்களில் உள்ள காபி இயந்திரங்களில் இந்த கொழுப்பை எந்த அளவுக்கு வடிகட்டுகின்றன என்பது பற்றிய ஆய்வுகள் நடத்தப் படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வழக்கமான பில்டர் காபி தயாரிப்பாளர்கள், இந்த கொழுப்பு சேர்மங்களில் 90 சதவீதத்தை வடிகட்டி அகற்றி விடுவார்கள் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இயந்திரங்களால் வழங்கப் படும் காபியில் உள்ள கெட்ட கொழுப்புக்களால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே, தினமும் அதிக அளவிலான காபி குடிப்பவர்கள், காகித வடிகட்டிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் காபிக்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.