ராமநாதபுரத்தில் இருதரப்பைச் சேர்ந்த விக்ரம் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீரச் சூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஜெகன் திரையரங்கில் வீர தீரச் சூரன் திரைப்படம் வெளியிடப்பட இருந்தது. அதன் காரணமாக விக்ரம் ரசிகர்கள் பலர் திரையரங்கம் முன்பு கூடி, ஆட்டம் பாட்டத்துடன் திரைப்படத்தைக் காண ஆவலோடு காத்திருந்தனர்.
இதற்கிடையே நீதிமன்ற தடை காரணமாகத் திரைப்படம் வெளியிடுவது தடைப்பட்டது. அப்போது இருதரப்பு விக்ரம் ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் ரசிகர் ஒருவருக்கு மண்டை உடைந்து பலத்த காயமடைந்த நிலையில், அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் விரட்டியடித்தனர்.
மேலும், மோதல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கேணிக்கரை போலீசார், மோதலில் ஈடுபட்ட சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.