சென்னை எழும்பூர் ரயில் நிலைய கட்டடத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் மாடியில் ரயில்வே சிக்னல் கம்யூனிகேசன் மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மையத்தில் திடீரென கரும்புகை வந்து தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கணினிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
கம்யூனிகேசன் மையத்தில் இருந்து ரயில்வே தொடர்பான தகவல்கள் பகிரப்படும் நிலையில், தீ விபத்து காரணமாக இணைய சேவை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பயணச்சீட்டு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேர்ந்தது தெரியவந்துள்ளது.