தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமூக நீதியை நிலைநாட்டச் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு உரியத் தீர்வு காண வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டில் கட்சியின் தலைவரான விஜய்க்கே முழு அதிகாரம் எனக் கூறி பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு திமுக அரசே காரணம் எனக் கூறி கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.