திருப்பத்தூர் அருகே கூலி கொடுக்கவில்லை என்றுகூறி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றதால் மனமுடைந்த விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பவர் தனது நிலத்தில் டிராக்டர் ஒட்டி நெல் நாற்று நடும் பணிக்கு, ஜடையனுர் பகுதியைச் சேர்ந்த மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை பணியமர்த்தியுள்ளார்.
இருவருக்கும் 12 ஆயிரம் ரூபாய் கூலி தருவதாக பேசப்பட்ட நிலையில், வேலை முடிந்ததும் ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
மீதி பணத்திற்கு நெல் நாற்றுகளைக் கொடுத்து அதனை விற்று கூலி பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், இருவரும் பணம் கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், ஜடையனூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஜெகநாதனை வழிமறித்து பணம் கேட்டுள்ளார், ஜெகநாதன் பணம் தரமறுத்ததால், அவரது இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளனர்.
இதனால், மனமுடைந்த ஜெகன்நாதன் வீட்டிற்கு வந்து பூச்சி கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஜெகநாதன் மனைவி அளித்த புகாரின்பேரில் மயில்குமார், வெங்கடாசலம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.