முதல் முறையாக, ஹமாஸ் தீவிரவாத அமைப்பினரை எதிர்த்து, காசா பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காசாவின் அதிகாரத்திலிருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவில் நடத்தும் தொடர் போராட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மக்கள் போராட்டத்தின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2006 ஆம் ஆண்டு, தனக்குப் போட்டியாக உள்ளவர்களை எல்லாம் காசாவை விட்டு வலுக்கட்டாயமாக ஹமாஸ் வெளியேற்றியது. பிறகு நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, 2007 ஆம் ஆண்டில் இருந்து காசாவில் }ஹமாஸ் ஆட்சி நடத்தி வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 1200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் கொல்லப் பட்டனர். மேலும் 251 பேர் பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் சிறைப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹமாஸை வேரோடு அழிப்பதற்காக ,இஸ்ரேல் தீவிர ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
கடந்த ஜனவரி வரை சுமார் 15 மாதங்களாகத் தொடர்ந்த போரில், 50,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் காசாவில் வசித்து வந்த 21 லட்சம் மக்களில் பெரும்பாலானோர் அகதிகளாக காசாவை விட்டுப் புலம்பெயர்ந்துள்ளனர். சுமார் 80 சதவீத காசாவின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
போர் நிறுத்தத்தை நீட்டிக்க,அமெரிக்காவின் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் கடைப் பிடிக்கவில்லை என்று ஹமாஸ் குற்றம் சாட்டியது.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி, முதல் மீண்டும் ஹமாஸ் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், காசாவில் இருந்த ஒரெயோரு புற்றுநோய் மருத்துவமனையும் குண்டுவீச்சுக்குத் தரை மட்டமாகியுள்ளது. நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
பதிலடியாக,இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லாகியா நகர மக்களை வெளியேற்ற இஸ்ரேல் முடிவு செய்தது. இது அப்பகுதி மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, மிகப் பெரிய அளவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹமாஸ் ஆட்சி ஒழிக என்றும், இஸ்லாமிய ஆட்சி ஒழிக என்றும் வெளியேறு வெளியேறு ஹமாஸ் வெளியேறு என்றும் முழக்கமிட்டப்படி, இளைஞர்கள் பெண்கள் என பாலஸ்தீனியர்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.
துப்பாக்கி ஏந்திய முகமூடி அணிந்த ஹமாஸ் அமைப்பினர் வலுக்கட்டாயமாகப் போராட்டக்காரர்களைத் தாக்கியுள்ளனர். இஸ்ரேல் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்களைத் திசை திருப்பும் முயற்சியாக இந்த போராட்டம் நடப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ், போராட்டக்காரர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்தியுள்ளது.
போர் தொடங்குவதற்கு முன்பே,ஹமாஸுக்கு காசா மக்களிடம் எதிர்ப்பு இருந்தது. ஆனால் ஹமாஸ் மீதான பயம் காரணமாக எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டாமல் இருந்தனர். தங்கள் காயங்களுக்கு தாங்களே மருந்து போட்டு கொள்கிறோம் என்று கூறும் காசா மக்கள், ஹமாஸ் அதிகாரத்தை விட்டு விலக வேண்டும் என்றும் , காசாவை விட்டு ஹமாஸ் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
கடந்த மே மாதம், அரபு உலக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு (AWRAD) நடத்திய கருத்துக் கணிப்பில், காசாவில் 24 சதவீத மக்கள் மட்டுமே ஹமாஸை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. வடக்கு காசாவில் நடந்த மக்கள் போராட்டம், ஹமாஸ் மீது பாலஸ்தீனியர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக, ஹமாஸை அதிகாரத்தில் விட்டுச் செல்லும் எந்தவொரு போர்நிறுத்தமும் எதிர்காலத்தில் மற்றொரு போருக்கு வழிவகுக்கும் என்று காசா மக்கள் அஞ்சுவதையே இந்த போராட்டம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஏற்கெனவே, காசாவின் போருக்குப் பிந்தைய ஆட்சி குறித்த விவாதங்களில் பெரும்பாலும் பாலஸ்தீன அதிகார சபை ஓரங்கட்டப்பட்டுள்ளது. மேலும், பாலஸ்தீன அதிகாரசபை மீண்டும் ஆட்சிக்கு வருவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் போரின் முடிவில், ஹமாஸ் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டால், காசாவை யார் ஆளப் போவது யார் ? என்ற கேள்விக்கு யார் பதில் சொல்ல முடியும் ? என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.