நேபாளத்தில் போராட்டத்தின் போது வெடித்த வன்முறையில் இருவர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் மன்னராட்சி ஆதரவாளர்கள் மற்றும் குடியரசு ஆதரவாளர்கள் என இரு தரப்பினரும் ப்ரிகுடிமாண்டப் என்ற பகுதியில் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால், இரு தரப்பினரையும் கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட பகுதியான நியூ பனேஷ்வரை நோக்கி, ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். கட்டுப்பாடுகளை மீறி செல்ல முயன்றதால், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க தண்ணீர் பீரங்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தினர்.
இந்த தாக்குதலில் மன்னராட்சி ஆதரவாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேபாளத்தில் முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.