தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே சிறுமிக்கு முன்னாள் காதலன் தீ வைத்த சம்பவத்தில் 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த அய்யனார் – காளியம்மாள் தம்பதியின் 17 வயது மகள், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்து எதிர்ப்பு கிளம்பியதால், காதலை சிறுமி கைவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சந்தோஷ் தொடர்ந்து சிறுமிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 23-ம் தேதி சிறுமியை தேடி அவரது பாட்டி வீட்டிற்கு சென்ற சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா, சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சந்தோஷ், முத்தையா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.