விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரனிடம் பெண் ஒருவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலவனத்தம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு இடையே, அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் தலைமையில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்திலிருந்த மீனா என்ற பெண் ஒருவர், கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நேரத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் என அமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கு மத்திய அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அப்பெண், 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் நடந்துகொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் ராமச்சந்திரன், ஆர்ப்பாட்டத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுக் கிளம்பிச் சென்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மீனா, மக்களை திசைதிருப்புவதற்காக அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர் இராமச்சந்திரன் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாகத் தெரிவித்தார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் நடைபெறும் ஊழல் குறித்துப் புகாரளித்ததால் தனது சம்பளத்தைக் கொடுக்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.