தமிழக பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக் கோரிய விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, தமிழக பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்யச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கக்கோரி, பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஸ்ரீராம் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுக்கு 6-ம் தேதி மனு அளித்துவிட்டு உரிய கால அவகாசம் வழங்காமல், 13-ம் தேதி இந்த வழக்கைத் தாக்கல் செய்ததன் மூலம், பொதுநல வழக்கு தொடரும் நடைமுறையைத் தவறாக பயன்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து வழக்கை திரும்பப்பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தபோதிலும் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கப்படும் என அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.