மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
கள்ளப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார், உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் பணி முடிந்து மது அருந்துவதற்காக முத்தையன்பட்டியில் உள்ள மதுக் கடைக்கு சென்றார்.
அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை, கஞ்சா வழக்கில் சிறை சென்ற பொன்வண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கம்பம் வனப் பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது போலீசாரை அவர்கள் தாக்க முயன்றதால் 4 பேரையும் சுட்டுப் பிடித்தனர்.
இதில் காயமடைந்த குற்றவாளிகள் மூன்று பேர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த பொன்வண்ணன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தாக்குதலில் காயமடைந்த காவலர் சுந்தரபாண்டி, கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி வந்திதா பாண்டே, மதுரை மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.