நாகையில் நூதன முறையில் மீன்களுக்கு இடையில் வைத்து கடத்த முயன்ற மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை வழியாக தஞ்சைக்கு மதுபானம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, திருச்சி மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். புத்தூர் ரவுண்டானா பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரைக்காலில் இருந்து மீன் ஏற்றி வந்த வாகனத்தை மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது, மீன் பெட்டிகளுக்கு இடையே மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டறிந்தனர். இதையடுத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், திராவிட செல்வன் என்பவரை கைது செய்தனர். இதுகுறித்து நாகப்பட்டினம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.