யுகாதி பண்டிகையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யுகாதி பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிவபெருமானை தரிசனம் செய்தனர்.