சக்திவாய்ந்த நிலநடுக்கம் மியான்மரை புரட்டி போடப் பட்டுள்ளது. பக்கத்து நாடான தாய்லாந்தையும் சின்னாபின்னமாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணம் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த வெள்ளிக்கிழமை, மியான்மரில் மாண்டலே நகருக்கு அருகிலுள்ள சாகிங் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 12 நிமிடங்களே ஆன நிலையில், 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 1500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இடிந்து விழுந்த மழலையர் பள்ளியில் 50 குழந்தைகள் மற்றும் 6 ஆசிரியர்கள் பலியானதாக கூறப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம் தடை காரணமாக மியான்மரின் பெருநகரங்கள் எல்லாம் இருளில் மூழ்கியுள்ளன. மீட்புப் பணிகளில் ராணுவம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்தியா மற்றும் உலக நாடுகள் பலவும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சீனாவிலும் உணரப்பட்டது. தாய்லாந்தில் முழுமையாக கட்டி முடிக்கப்படாத 30 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உலகின் மிகவும் நில அதிர்வுகள் ஏற்படும் நாடுகளில் மியான்மரும் ஒன்றாகும். இந்திய தட்டுக்கும் யூரேசியா தட்டுக்கும் இடையிலான தட்டு, மியான்மரில் நடுவில் வெட்டுகிறது. இப்படி இரண்டு டெக்டோனிக் தகடுகளுக்கு இடையிலான எல்லையில் மியான்மர் அமைந்துள்ளது.
இந்த இரண்டு தட்டுகளும்,வெவ்வேறு வேகத்தில் ஒன்றையொன்றுஅடிமட்டத்தில்,கடந்து செல்கின்றன. இது பொதுவாக குறைவான சக்தி வாய்ந்த “ஸ்ட்ரைக் ஸ்லிப்” நிலநடுக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது சுமத்ரா போன்ற “துணை மண்டலங்களில்” ஏற்படுவதை விட ஆபத்து குறைவான நில நடுக்கமாகும். ஆனால், ஒரு தட்டு மற்றொன்றின் கீழ் சரியும் போது, 8 ரிக்டர் அளவு வரையிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் இந்தப் பகுதி, பல நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி வழக்கமாக நிலநடுக்கம் வராத பகுதி என்பதால், நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலான உள்கட்டமைப்புகள் கட்டப் படவில்லை என்று சொல்லப் படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் மியான்மரில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கம் இதுவாகும். 10,000 முதல் 1,00,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70 சதவீதம் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.