புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தங்கத்தின் விலை 10 கிராம் 87,000 முதல் 96,000 ரூபாய் வரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை விற்பனை அதிகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
உலகளவில் தங்கத்தின் மீதான மோகம் இந்தியாவில் தான் அதிகம். இந்தியர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக வைத்துள்ளனர். இதன் காரணமாக, தங்கம் இறக்குமதியில் இந்தியா உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஈர்ப்பு அப்படியே தான் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் தங்கத்தின் விலைகள் எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கும் என்று ஐசிஐசிஐ வங்கி குளோபல் மார்க்கெட்ஸின் அறிக்கை தெரிவிக்கிறது.
அதாவது 10 கிராம் தங்கத்தின் விலை 87,000 முதல் 90,000 ரூபாய் வரை அதிகரிக்கும் என்றும், 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதுவே 96,000 ரூபாய் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு தேவை இருந்தாலும் தங்கத்தின் விலை உயர்வு நகை வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதனால், தங்க நகைகளின் தேவையை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 11 மாதங்களில் தங்கம் இறக்குமதி 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது ஒரு மாதத்துக்கு 14 சதவீத சரிவாகும். ஆண்டுக்கு என்று கணக்கிட்டால் 63 சதவீத சரிவாகும்.
தங்க ETF என்பது நடப்பு தங்கத்தின் விலைக்கேற்ப தங்கக் கட்டியில் முதலீடு செய்யும் ஒரு செயலற்ற முதலீட்டு கருவியாகும். ஒரு நிறுவனத்தின் மற்ற பங்குகளைப் போலவே, தங்க ETFகளும் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. ஒரு முதலீட்டாளர் பங்குகளை வர்த்தகம் செய்வதுபோல தங்க ETFகளையும் வர்த்தகம் செய்யலாம்.
தங்க ETFகள் முதன்மையாக தேசிய பங்குச்சந்தையிலும், மும்பை பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. தங்க ETF ரொக்கப் பிரிவில் வர்த்தகம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் 19.8 பில்லியன் ரூபாய்க்கு தங்க ETFகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஒன்பது மாதங்களில் பதிவு செய்யப்பட்ட சராசரி அளவை விட அதிகமாகும்.
விலையேறும் என்ற நிலையில் மத்திய வங்கிகளும் தங்கள் தங்க இருப்புகளை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிக் கட்டணம் அமலுக்கு வருகிறது. இது உலக அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இதுவே, தங்கத்தை அதிமுக்கிய பாதுகாப்பான சொத்தாக மாற்றியுள்ளது.
அதே நேரத்தில்அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்து உள்ளது. இதுவும் தங்க விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப் போனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் தங்கத்தின் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
அடுத்த 7 மாதங்களில் உலகளவில் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தையும் தாண்டி உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கூடுதலாக, அமெரிக்க அரசின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்காக தங்கத்தை வாங்கி குவித்து வருகிறார்கள். இதனால், தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்த போதிலும், தங்கத்தின் தேவையும் அதிகரிக்கிறது என்பது தான் அதிசயமான உண்மை.