மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உசிலம்பட்டி அருகே உள்ள கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர், கடந்த 27-ம் தேதி கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். அவருடன் சென்ற ராஜாராம் என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளைத் தேடினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய பொன்வண்ணன் என்பவர் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருடன் கைது செய்யப்பட்ட பாஸ்கரன், பிரபாகரன் மற்றும் சிவனேஷ்வரன் ஆகியோர் உசிலம்பட்டி நடுவர் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மூவரும் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.