கடலூரில் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரத்தில் தேடப்பட்டு வரும் விசிக நிர்வாகி செல்வத்தை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். விசிக மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ள இவர், அந்த கிராமத்தின் அருகேயுள்ள காட்டுக் கொட்டகையில் கள்ள நோட்டு அடித்து வந்துள்ளார்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 83 ஆயிரம் ரூபாய்க்கான 500 ரூபாய் கள்ள நோட்டுகள், லேப்டாப், வாக்கி டாக்கி, கைத்துப்பாக்கி, அச்சடிக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள விசிக நிர்வாகி செல்வம் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே விசிக மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்த செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துவித பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.