சென்னையில் பிரேசில் லெஜண்ட்ஸ் – இந்தியன் ஆல் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில், 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.
நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் அணியும், விஜயன் வழிநடத்திய இந்திய அணியும் மோதின. 2002-ல் கால்பந்து உலகக்கோப்பையை வென்ற பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்களான ரிவால்டோ, லூசியோ, கில்பர்டோ சில்வா, இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் வீரர்களான சண்முகம் வெங்கடேஷ், கரண்ஜித் சிங், சுபாஷிஷ்ராய் சவுத்ரி, அர்னாப் மண்டல் உள்ளிட்டோர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதனால் போட்டி தொடங்கும் முன்பே மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ஆட்டம் தொடங்கி முதல் பாதி வரை கோல் அடிக்க இரு அணி வீரர்களும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. ஆட்டத்தின் 2-வது பாதியில் போட்டி விறுவிறுப்படைந்த நிலையில், 43-வது நிமிடத்தில் வியோலா முதல் கோல் அடித்து பிரேசில் அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார்.
அதற்கடுத்த நிமிடத்தில் இந்தியாவின் பிபியானோ ஒரு கோல் அடிக்க ஆட்டம் மீண்டும் சமநிலை பெற்றது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய ரிக்கார்டோ ஒலிவேரா மீண்டும் ஒரு கோலை அடிக்க, ஆட்ட நேர முடிவில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தங்கள் கனவு வீரர்களை நேரில் கண்ட தருணங்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை என நெகிழ்ந்த ரசிகர்கள், இப்போட்டியின் மூலம் இந்தியாவில் கால்பந்தாட்டத்தின் மீதான பார்வை நிச்சயம் மாறும் என கருத்து தெரிவித்தனர்.