கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே புண்ணியம் பகுதியில் நடைபெற்ற கம்யூனிஸ்டு கட்சி பொதுக்கூட்டத்தில், இடதுசாரி எழுத்தாளர் ஷியாம் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்து கடவுளைப்பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தட்டிக்கேட்கச் சென்ற ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராபின்சனை, கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளான சசிகுமார், சரவணன், அனில் குமார் மற்றும் ராபி ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த ராபின்சன் அருமனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய இடதுசாரி எழுத்தாளர் மற்றும் தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து அமைப்புகள் மற்றும் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.