சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் கண்ணாடியை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். வார விடுமுறையை ஒட்டி குடும்பத்தினருடன் சொந்த ஊரான மாங்காட்டிற்கு சென்றுவிட்டு, மீண்டும் திண்டுக்கலுக்கு திரும்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் சஞ்சீவி மற்றும் குடும்பத்தினர் சென்ற காரை துரத்தியுள்ளனர்.
இதனால் பயந்துபோன சஞ்சீவி காரை ஒரு ஓரமாக நிறுத்தி மற்றவர்களிடம் உதவி கேட்க முற்பட்டுள்ளார். அப்போது பயங்கர ஆயுதத்தால் காரின் கண்ணாடியை உடைத்த அந்த நபர்கள் அவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் சிலர் வாகனத்தை நிறுத்தி அருகில் வந்ததால், 3 நபர்களும் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் சஞ்சீவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.