சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேர உணவு டெலிவரி செய்யும் வசதியின் மூலம் பயனர்களுக்கு தங்களது சேவைகளை வழங்கி வருகின்றன. அதே வேளையில், இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் சரியாக நடத்தப்படவில்லை என்ற கருத்துகளும் எழுந்து வருகின்றன.
வெயில், மழை போன்ற பல்வேறு சூழ்நிலையிலும் வேலை செய்யும் அவர்களுக்கு ஓய்வு அறைகளை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், உணவு மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் ஊழியர்களுக்காக முக்கிய சாலைகளில் ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி சோதனை முறையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் ஏ.சி வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.