சென்னை பெரவள்ளூரில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெரவள்ளூர் லோகோ ஒர்க்ஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞரான சந்துரு என்பவர், பி.வி.காலனியில் உள்ள தனது நண்பரான பெங்கால் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து நேற்று மாலை மது குடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மது போதையில் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து சந்துரு அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து அவரது வீட்டிற்குச் சென்ற சிலர், சமாதானம் பேச, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு சந்துருவை அழைத்துச் சென்றனர்.
அங்கு, பெங்கால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சந்துருவை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.