கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவரை, அடிதடி வழக்கில் போலீசார் தேடி வந்தனர். திட்டக்குடி அருகேயுள்ள அதர் நத்தம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, செல்வம் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டபோது 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கள்ளநோட்டுகள், அவற்றை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டிங் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி டாக்கி, கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நவீன் ராஜா, கார்த்திக் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய விசிக பிரமுகர் செல்வத்தை தேடி வருவதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.