தேனியில் மேட்ரிமோனி மூலம் திருமணத்துக்குப் பெண் தேடிய இளைஞரைக் குறிவைத்து 88 லட்சம் ரூபாய் மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேட்ரிமோனி செயலியில் பதிவு செய்து பெண் தேடி வந்துள்ளார். அப்போது அந்த மேட்ரிமோனி செயலி மூலமாக இளைஞரை ஹரிணி என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது அப்பெண் இளைஞரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பேசிவந்துள்ளார். பின்னர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் எனக் கூறி, அந்த இளைஞரிடம் சுமார் 88 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் அப்பெண் பேசுவதை நிறுத்தவே, சந்தேகமடைந்த இளைஞர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசாரின் விசாரணையில் மோசடி கும்பலைச் சேர்ந்த நால்வர் பெண்ணைப் போலப் பேசி அந்த இளைஞரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 செல்போன்கள், 29 டெபிட் கார்டுகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.