திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி காதலன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் அடுத்த பருவாய் கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற இளம்பெண் கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார்.
வித்யாவும் அதே கல்லூரியில் பயின்று வந்த வெண்மணி என்ற இளைஞரும் மூன்று வருடங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வெண்மணி வித்யாவின் வீட்டிற்குப் பெண் கேட்டு வந்ததாகவும், பெண் கொடுக்க அவரின் பெற்றோர் மறுத்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் வித்யா மீது பீரோ விழுந்ததில், தலையில் காயமடைந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் வித்யாவின் உடலை அடக்கம் செய்துள்ளனர். தற்போது வித்யாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் வித்யா ஆணவக்கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட வித்யாவின் உடலைத் தோண்டி எடுத்து உடற் கூறாய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.