கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நிவாஸ் ஹவுஸிங் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுக் கடன் வாங்கியுள்ளார்.
வீட்டுக்கடன் தவணையை முறையாகச் செலுத்தி வந்த அந்த பெண் ஒருமாத தவணை மட்டும் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பெண்ணின் வீட்டிற்குச் சென்று நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டும் தொனியில் பேசியுள்ளனர். தகவலறிந்து வந்த பெண்ணின் உறவினர்கள் நிதி நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கடன் தவணை செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கும்பலாக சென்று மிரட்டுவது வாடிக்கையாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கும் என்றும், தனியார் நிதி நிறுவனங்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.