கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து குவிந்த பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அருமனை பகுதியில் நடைபெற்ற கம்யூனிஸ்டு பொதுக்கூட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஷியாம்குமார் என்பவர் இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஆர்.எஸ்.எஸ் வெள்ளாங்கோடு மண்டல பொறுப்பாளர் ராபின்சன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து அருமனை புண்ணியம் பகுதியில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த குவிந்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினர், காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராபின்சனை தாக்கியவர்கள் மற்றும் கேரள எழுத்தாளர் ஷியாம்குமார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட அளவிலான போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.