இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால், உதகை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு, உணவகங்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக முக்கிய சுற்றுலா தலமான உதகையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆட்டோ, டாக்சி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும், கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.