கடலூரில் லாரி ஓட்டுநர்களைத் தாக்கி வழிப்பறி செய்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.
புதுச்சேரி – நாகை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மறித்து மர்ம கும்பல் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று கடலூர் அருகே லாரியை வழிமறித்த கும்பல், ஓட்டுநர் காளிமுத்துவை அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடியது.
இதேபோல் மற்றொரு லாரி ஓட்டுநரான மணிமாறன் என்பவரையும் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்ததாகத் தெரிகிறது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எம்.புதூர் பகுதியில் கொள்ளை கும்பல் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, விரைந்து சென்ற போலீசார், கொள்ளை கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் 2 போலீசாரை அரிவாளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் விஜய் உயிரிழந்தார்.
அவரது உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுட்டுக் கொல்லப்பட்ட விஜய் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 33 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் உள்ளதாகத் தெரிகிறது.