திருச்செங்கோடு அருகே சட்டவிரோதமாகச் செயல்படும் மதுபான கூடத்தில், மதுபாட்டிலுக்கு ஆஃபராக இட்லி, சிக்கன் குழம்பு வழங்கப்படுவதால் மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே ராமா புரம் பகுதியில் சட்டவிரோதமாக சந்துக்கிடையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு அனுமதியின்றி செயல்படும் இந்த கடையில் காலை 6 மணி முதல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், குவாட்டர் வாங்கினால் ஒரு இட்லி, சிக்கன் குழம்பு வழங்கப்படும் எனச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான மதுபிரியர்கள் காலை முதலே மதுபானங்கள் வாங்கக் குவிந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, குடியிருப்பு பகுதியில் செயல்படும் சட்டவிரோத மதுபான கூடத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சந்துக்கடை தொடர்பாக காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.