பெருங்காமநல்லூர் பொதுமக்களின் தியாகம், ஒரு வீர சரித்திரம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், எங்கள் மக்கள் விவசாயிகள், காட்டுமிராண்டிகள் அல்ல என, ஆங்கிலேய அரசின் குற்றப் பரம்பரையினர் சட்டத்தினை (Criminal Tribes Act) எதிர்த்துப் போராடி, ஆங்கிலேய அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கு, மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் பொதுமக்கள் 17 பேர் உயிர்த் தியாகம் செய்த தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
நம் மக்களின் இந்தத் தியாகப் போராட்டம், குற்றப் பரம்பரை சட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டிருந்த 213 ஜாதிகளைச் சார்ந்த பல லட்சம் மக்களுக்கான உரிமையை மீட்க, ஆரம்பப் புள்ளியாக அமைந்தததாக அவர் கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, தமிழக பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது, பெருங்காமநல்லூருக்குச் சென்று, உயிர்த் தியாகம் செய்தவர்கள் நினைவுத் தூணுக்கும், அவர்களது நினைவைப் போற்றும் நடுகல்லுக்கும் மலரஞ்சலி செலுத்தி வணங்கினோம் எனறும், பெருங்காமநல்லூர் பொதுமக்கள் தியாகம், ஒரு வீர சரித்திரமாகும். அவர்கள் ஒவ்வொருவரின் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.