நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மக்களவையின் 2வது அமர்வின்போது வக்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவையின் வேலை நேரம் 118 சதவீதத்திற்கு அதிகமாக இருந்ததாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
மேலும், மக்களவையை சீரிய முறையில் வழிநடத்த உதவிய பிரதமர், நாடாளுமன்ற விவகார அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இதேபோன்று, மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.