தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா வரும் 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
ஆனால், திருப்பணிகள் முறையாகச் செய்யப்படவில்லை எனவும், அதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் கூறி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, கோயில் கும்பாபிஷேகத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கும்பாபிஷேக பணிகள் பூர்த்தியடைந்துள்ள சூழலில், தடை விதிப்பது சரியாக இருக்காது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிமன்றம், கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை விலக்கிக்கொண்டது.