நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சிமெண்ட் சாலையை அகற்றவந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கலியனுர் ஊராட்சிக்குட்பட்ட சிலாங்காடு, அம்மன் நகர், பகுதியில் கடந்த 30 வருடங்களாக சாலை வசதி இல்லாத நிலையில் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
அரசு சார்பில் சாலை அமைக்காத நிலையில் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 40 லட்சம் ரூபாய் கிராம மக்களின் பங்களிப்பு நிதி திரட்டி சொந்த செலவில் சிமெண்ட் சாலை அமைத்தனர்.
இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை கால்வாயை மூடி அமைக்கப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறையினர் மக்கள் பங்களிப்பில் போடப்பட்ட சாலையை இடிப்பதற்காக சென்றனர். . இதனை அறிந்த ப பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு ஜேசிபி வாகனம் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.