தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர் குறித்து, பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என, ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கம்பரையும், ராமரையும் கொண்டாடும் வகையில் கம்ப சித்திரம் விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற விழாவில், சுதா சேஷய்யன், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமாயணம் கதையை எவர் கேட்டாலும் அது அனைவர் மனதிலும் பதிந்துவிடும் எனத் தெரிவித்தார்.
பகவான் மகா விஷ்ணு, ஸ்ரீராமராக அவதாரம் எடுத்து சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திருப்பதை ராமாயணம் போதிப்பதாகவும் அவர் கூறினார்.
ஒழுக்கமான வாழ்வை ராமர் வாழ்ந்ததால் தான் ஸ்ரீராமரை “மறியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமர்” எனக் குறிப்பிடுவதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமாயணத்தை எழுதிய கம்பர் குறித்து பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.