சர்ச்சைக்குப் பெயர் பெற்ற இந்து சாமியார் நித்தியானந்தா, தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பல லட்சம் ஏக்கர் அமேசான் காடுகளை ஆக்கிரமித்த புதிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கின் பின்னணி என்ன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
திருவண்ணாமலையில், சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்த ராஜசேகர், திடீரென நித்தியானந்தாவாகப் பிரபலமானார். ஆன்மீகச் சொற்பொழிவுகள்,கட்டுரைகள் மூலம் மக்களைக் கவர்ந்த நித்தியானந்தாவின் புகழ் வெளிநாடுகளிலும் பரவியது.
கர்நாடகாவின் பிடதியில் ஆசிரமம் தொடங்கிய, நித்தியானந்தாவுக்கு இந்தியா உட்படப் பல வெளிநாடுகளில் அதிகமான ஆசிரமங்கள் உள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்தியானந்தா, ஒருகட்டத்தில், நாட்டை விட்டுத் தலைமறைவானார். அவரது பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், தனக்கென ஒரு நாடு, தனக்கென ஒரு மக்கள் என ஈக்குவேடார் அருகில் உள்ள ஒரு தீவை நித்தியானந்தா விலைக்கு வாங்கியதாகக் கூறப் படுகிறது. அதனை, இந்துக்களுக்கான தனி நாடாக UNITED STATES OF KAILASA என்று அழைக்கப்படும் என்று நித்தியானந்தா அறிவித்தார்.
கைலாசாவின் அதிபராக தன்னையே அறிவித்துக் கொண்டவர், அந்த நாட்டுக்கென தனி கொடி, சட்டத் திட்டம், கரன்சி, பாஸ்போர்ட் என ஒரு நாட்டுக்கான தேவையான அனைத்தும் அறிவித்தார்.
சில தினங்களுக்கு முன், நித்தியானந்தா இந்து தர்மத்தைக் காப்பதற்காக உயிர் தியாகம் செய்து விட்டதாக அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் கூறியிருந்தார். உடனடியாக, தான் உயிரோடு இருப்பதாக விளக்கமளித்து ஒரு வீடியோவை நித்தியானந்தா வெளியிட்டார்.
இதற்கிடையே, தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், அமேசான் காட்டில் பழங்குடி மக்கள் வசிக்கும் 10 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலத்தை நித்தியானந்தா அபரிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாரே, கயூபாபா மற்றும் எஸ்ஸே எஜ்ஜா ஆகிய மூன்று பழங்குடி இன மக்களின் 10 லட்சம் ஏக்கர் நிலத்தைச் சட்ட விரோதமாக நித்தியானந்தாவின் சீடர்கள், குத்தகைக்கு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குத்தகைக்கு எடுத்த நிலத்தில் உள்ள அரிய வகை வளங்கள் உட்பட அனைத்து உரிமைகளையும் கைலாசா கொண்டு இருக்கும் என்று பத்திரம் எழுதப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில்,குறிப்பிட்ட அந்த நிலத்தை 1000 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பழங்குடி மக்களிடம் கையெழுத்து வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தித் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகள் தந்து, முறைகேடாகப் பழங்குடியினரை ஏமாற்றிய நித்தியானந்தாவின் சீடர்கள், அங்கேயே தங்கி ஆன்மீகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். பழங்குடியின மக்கள் தங்கள் விருப்பப்படி நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ள மட்டுமே பொலிவியா அரசு அனுமதி வழங்கியுள்ளது. நிலங்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ, அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
வெளிநாட்டில் இருந்து குற்ற வழக்கில், தப்பித்து வந்தவர், பழங்குடி மக்களின் நிலத்தைக் கைப்பற்ற ஒப்பந்தம் செய்திருப்பது பொலிவியா நாட்டில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக பழங்குடி நலத்துறை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்துள்ள பொலிவியா அதிபர், நித்தியானந்தாவின் கைலாசாவுடன் உடன் பொலிவியா பழங்குடியினர் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் செல்லாது என்று அறிவித்துள்ளார். மேலும் விரிவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பழங்குடியினரின் பல லட்சம் ஏக்கர் நிலத்தை அபரிகரித்த வழக்கில், இதுவரை நித்தியானந்தாவின் சீடர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதில் 3 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைலாசா என்ற நாட்டுக்குச் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள பொலிவியாவின் வெளியுறவுத்துறை, இந்த குற்ற வழக்கில் நித்தியானந்தாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
நித்தியானந்தா ஆக்கிரமித்த இந்த நிலப்பகுதி, டெல்லியைக் காட்டிலும் 2.6 மடங்கு பெரியதாகும். சென்னையைக் காட்டிலும் 9.1 மடங்கு பெரியதாகும். உலக அளவில் நடந்த மிகப்பெரிய நிலக்கொள்ளை இது என்று கூறப்படுகிறது.