பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பாம்பன் ரயில் பாலத்தை ஞாயிற்றுக் கிழமை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ள நிலையில், விழாவில் பங்கேற்பதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் சென்னையிலிருந்து மதுரை வந்தடைந்தனர்.
மதுரை விமான நிலையம் வந்த அவர்களுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சுப்ரமணிய சுவாமி கோயில் சார்பாக மத்திய அமைச்சருக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாம்பனில் ரயில் பாலம் அமைக்கத் தூண்டுகோலாக இருந்ததாகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
பாம்பன் பாலமானது தமிழ் மொழி, கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதமாக அமைந்திருப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இத்தகைய சிறப்புமிக்க பாலத்தை அமைத்த அனைத்து பொறியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், பாம்பன் பாலம் தான் கடலில் கட்டப்பட்டுள்ள முதல் செங்குத்து லிப்ட் ரயில் பாலம் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.